இஸ்தான்புல், ஜூன் 19 - ஏர் இந்தியா 171 விமானம் கடந்த வாரம் மேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியான 202 பேர் புதன்கிழமை நிலவரப்படி டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் அரசு தெரிவித்தது.
அடையாளம் காணப்பட்ட 169 உடல்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசாங்கத் தகவல்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரியின் தங்குமிட வளாகத்தில் மோதியது.
அந்த போயிங் 787 ரக விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்ததை ஏர் இந்தியா முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
மீட்புப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் மேலும் பல உடல்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 பேராக உயர்வு கண்டது. இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார்.


