கோலாலம்பூர், ஜூன் 19 - தலைநகர், ஜாலான் சீலாங்கில் உள்நாட்டு
வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் நேற்று
அதிரடிச் சோதனை நடத்தினர். அந்நிய நாட்டினர் அதிகம் ஒன்று கூடும் 11
வர்த்தக மையங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு
குற்றங்களுக்காக 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இரவு 9.00 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையின் போது
அப்பகுதியில் அந்நிய நாட்டினரால் நடத்தப்பட்ட தொலைத் தொடர்பு
சாதன விற்பனை நிலையத்திலிருந்து 6,500 வெள்ளி மதிப்புள்ள 125 போலி
கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அமைச்சின் கோலாலம்பூர் பிரிவு
இயக்குநர் முகமது சப்ரி செமான் கூறினார்.
பொருள்களுக்கு விலைப்பட்டியல் வைக்காதது, சான்றளிக்கப்படாத எடைக்
கருவிகளை வைத்திருந்தது மற்றும் வரத்தக முத்திரை விதிகளை மீறியது
உள்ளிட்ட குற்றங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை
நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
மளிகைக் கடைகள், உணவகங்கள், ஆகிய வர்த்தக மையங்களை இந்த
சோதனை இலக்காக கொண்டிருந்தது. அந்நிய நாட்டினர் இங்கு
பெருமளவில் குவிந்துள்ளது மற்றும் வியாபார மையங்களில்
விலைப்பட்டியல் வைக்கப்படாதது ஆகியவை தொடர்பான புகார்கள்
மற்றும் உளவு நடவடிக்கையின் விளைவாக இந்த சோதனை
நடத்தப்பட்டது என்றார் அவர்.
குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் ஒத்துப்புடன் நடத்தப்பட்ட இந்த
சோதனையில் வங்காளதேசம், நேப்பாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான்,
மியன்மார் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 24 அந்நிய நாட்டினர் கைது
செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.


