துபாய்/ஜெருசலம், ஜூன் 19 - நிபந்தனையற்ற முறையில் சரணடைவது தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை தனது நாடு ஏற்காது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஈரான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு ஊடகங்களில் ஒளிபரப்பான தனது முதலாவது உரையில், இஸ்லாமியக் குடியரசின் மீது அமைதியையோ அல்லது போரையோ திணிக்க முடியாது என்று காமெனி கூறினார்.
ஈரானை, ஈரானிய தேசத்தை மற்றும் அதன் வரலாற்றை அறிந்த அறிவார்ந்த மக்கள் இந்த தேசத்திடம் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள். ஏனெனில் ஈரானிய தேசம் ஒருபோதும் சரணடையாது என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி சரிசெய்ய முடியாத சேதத்தை உருவாக்கும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நேற்று இரவு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் நகரத்தின் மீது குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெஹ்ரானிலிருந்து தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்குவதில் இஸ்ரேலுடன் இணைவது உள்ளிட்ட சாத்தியங்களை டிரம்ப் பரிசீலித்து வருவதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள சுமார் 20 இலக்குகளை ஒரே இரவில் 50 இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
இப்போரில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்றால் அதற்குப் பதிலடி கொடுப்போம் என்று தாங்கள் வாஷிங்டனுக்குத் தெரிவித்திருந்ததாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி கூறினார்.


