பாரிஸ், ஜூன் 18 - உலகின் சிறந்த குறைந்த கட்டண விமான நிறுவனமாக 2025 Skytrax World Airline விருது விழாவில் மீண்டும் ஏர் ஆசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 16-ஆவது ஆண்டாக இவ்விருதை வெல்லும் ஏர் ஆசியாவின் சாதனை, மலிவு கட்டணம் மற்றும் சிறந்த செயல்பாடுடன் 130க்கும் மேற்பட்ட இடங்களை இணைத்து ஆசியான் முழுவதும் கொண்டிருக்கும் வலுவான ஆதரவின் வெற்றியைக் காட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தங்களைத் தேர்ந்தெடுக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு ஆசியா முழுவதுமான பயணத்தைக் குறைந்த விலையிலும், தடையின்றியும் வழங்கும் தங்கள் விமான நிறுவனத்தின் உண்மையான செயல்பாட்டிற்கு, இந்த அங்கீகாரம் சான்றாகும் என்று, நேற்று பிரான்சில் நடைபெற்ற 2025 Paris Air Show விருது விழாவில் அந்த விருதைப் பெற்றுக்கொண்ட Capital A தலைவரும் ஏர் ஆசியா இணை நிறுவனருமான டத்தோ கமாருடின் மெரானுன் தெரிவித்தார்.
இதனிடையே, ஏர் ஏசியா, தற்போது 100-ஆவது கோடி பயணியை வரவேற்க இலக்கு வைத்துள்ளதாக அதன் மற்றொரு இணை நிறுவனரும், Capital A நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ தோணி பெர்ணான்டஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், பயணிகளின் வலுவான ஆதரவும், விமான பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இல்லாமல், ஏர் ஆசியாவின் தொடர்ச்சியான சாதனை சாத்தியமில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
பெர்னாமா


