கோலாலம்பூர், ஜூன் 18 - நான்கு நாட்களுக்குள் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் தலைநகரில் பாதுகாப்பு நிலை இன்னும் முழு கட்டுப்பாட்டிலும் அமைதியாகவும் இருப்பதாக போலீசார் உறுதியளித்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான பகைமை காரணமாக இரண்டு சம்பவங்களும் நடந்திருக்கலாம் என்றும் அவை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளாக அல்லாமல் குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டிருந்தன என்றும் காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் (டத்தோ ருஸ்டி முகமட் இசா) கூறியது போல், இந்த சம்பவம் குறிப்பிட்ட இலக்குகளை உள்ளடக்கியது. தலைநகர் பகுதிக்கு வெளியே வெடித்த மோதலின் விளைவாக இது நிகழ்ந்துள்ளது.
ஆகவே, கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதால் பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கோலாலம்பூர் காவல் துறை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ரஸாருடின் கூறினார்.
கோலாலம்பூர் இன்னும் பாதுகாப்பாக உள்ளது. காவல்துறை சமூகத்தின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்யும். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்து தகவல் அளிக்கும் அதே வேளையில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே கடந்த காலத்தில் ஏற்பட்ட பகையின் விளைவாக கடந்த நான்கு நாட்களுக்குள் தலைநகரில் இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டன.


