கோலாலம்பூர், ஜூன் 18 - கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான போலி அனுமதி ஸ்டிக்கர்கள் அல்லது ஒட்டு வில்லைகள் மற்றும் தற்காலிகப் பாஸ்களை அச்சடித்த கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்ததோடு நால்வரையும் கைது செய்தனர்.
வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இ-பி.கே.எல்.எஸ். போலி ஆவணங்களுக்காக 11,000 வெள்ளி கட்டணம் வசூலித்து வந்த அரசு ஊழியர்களான ஒரு ஆடவரும் பெண்ணும் கைது செய்யப்பட்டதை மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஷக்கரியா ஷபான் உறுதிப்படுத்தினார்.
நேற்று காலை 11 மணியளவில் ஜாலான் ஈப்போவிலுள்ள இரண்டு இடங்களில் புத்ரா ஜெயா குடிநுழைத்துறை தலைமையகத்தின் வேவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த இடங்களில் உள்நாட்டை சேர்ந்த ஒரு ஆடவர் மற்றும் இரு பெண்களுடன் இக்கும்பலுக்கு முதகெலும்பாக செயல்பட்ட பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டான்.
அந்த பாகிஸ்தான் ஆடவன் எவ்வித ஆவணம் மற்றும் இந்நாட்டில் இருப்பதற்கான அனுமதி எதனையும் கொண்டிருக்கவில்லையென ஷக்கரியா கூறினார்.
அவர்களிடருந்து ஆறு வங்காளதேச விசா, இரண்டு இந்திய விசா, இரண்டு அமெரிக்கா விசா, இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் விசாவில் ஒட்டப்பட்ட 13 போலி வில்லைகளும் பறிமதல் செய்யப்பட்டன. அக்கும்பல் போலியான குடிநுழைவு வில்லையை அச்சிட்டு அதனை இந்நாட்டிலுள்ள சட்டவிரோதக் குடியேறிகளுக்கு 100 மற்றும் 120 வெள்ளிக்கு விற்று வந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.


