சிரம்பான், ஜூன் 18 - அருகிலுள்ள ஜெலுபு போதைப் பித்தர் மறுவாழ்வு மையத்திலிருந்து (புஸ்பென்) தப்பி சென்ற ஆறு பேரில் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இருபத்தைந்து முதல் 42 வயதுக்குட்பட்ட அந்பர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து அதிகாலை 1.00 மணிக்கு காவல்துறைக்கு புகார் கிடைத்தாக ஜெலுபு மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸிசான் சைட் கூறினார்.
தப்பியோடிய மற்றொரு 35 வயது நபர் 24 மணி நேரத்திற்குள் அந்த மையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கோய், தித்தி கேன் பிரம்பு தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தப்பியோடிய அனைவரையும் கண்டுபிடித்து கைது செய்ய
நெகிரி செம்பிலான் போலீஸ் தலைமையகத்தின் மோப்ப நாய் பிரிவு மற்றும் ஜெலுபுவில் உள்ள தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (ஏ.ஏ.டி.கே.) உறுப்பினர்களின் உதவியுடன் காவல்துறை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
இன்னும் தேடப்படுவோரில் பி. தினகரன் (வயது 36), ஜி. வினயேத்திரன் (வயது 36), வி. மணிமாறன் (வயது 38), எஸ். பால கணேஷ் (வயது 42) மற்றும் கே. மோகனராஜ் (வயது 25) ஆகியோர் ஆவர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அந்நபர்கள் குறித்த எந்தவொரு தகவலையும் அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திற்கும் அனுப்புவதன் மூலம் அல்லது ஜெலுபு மாவட்ட காவல் தலைமையகத்தை 06-6136222 மற்றும் 06-6137999 என்ற எண்களில் தொடர்பு கொள்வதன் மூலம் விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 223 மற்றும் 224வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அஸிசான் கூறினார்.


