கோலாலம்பூர், ஜூன் 18 - மலேசியாவின் ஓய்வூதிய முறைகளில் சீர்திருத்தம் செய்ய ஊழியர் சேம நிதி வாரியம் (KWSP) உறுதிபூண்டுள்ளது.
மக்கள் ஆயுட்காலம், அதிகரித்து வாழ்க்கைச் செலவுகள் மாற்றம் கண்டு வரும் இந்நேரத்தில்
தொழில் மற்றும் தேவைகளுக்கு இணங்க ஓய்வூதிய முறை இருக்க வேண்டும் என்று தலைமை செயல்முறை அதிகாரி அஹ்மாட் சுல்கார்னைன் ஒன் தெரிவித்திருக்கிறார்.
ஓய்வூதிய முறையை நவீனமயமாக்குவதிலும், வாழ்க்கை நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதற்கான தயார்நிலைகளை விரிவுபடுத்துவதிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
"1950களில் மலேசியாவின் ஆயுட்காலம் சுமார் 54 வயதிலிருந்து இன்று 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2050ஆம் ஆண்டுக்குள் 81 வயதை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 55 வயதுடைய EPF உறுப்பினர்களில் 36% பேர் மட்டுமே குறைந்தபட்சம் RM240,000 சேமிப்பைக் கொண்டிருந்தனர். இது 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு RM1,000 செலவுகளை ஈடுகட்ட போதுமானது ஆகும் என்றார்.
மலேசியர்கள் நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தயாராக இருப்பதை உறுதி செய்வது இப்போது நமது பணியாகும்", என்றார் அவர்.
2025-ஆம் ஆண்டு இ.பி.எப் உலக சமூக நல்வாழ்வு மாநாட்டில் வழங்கிய தொடக்க உரையில் அஹ்மாட் சுல்கார்னைன் இவ்வாறு கூறினார்.
வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை அல்லது துறையில் இருக்கும் பாரம்பரிய ஓய்வூதிய மாதிரியை இனி நிலைநிறுத்த முடியாது என்றும் சுல்கர்னைன் தெரிவித்தார்.
"வேலை உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. தொழிலாளர்கள் தொழில்களை மாற்றிக் கொள்கிறார்கள். புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். நமது ஓய்வூதிய சீர்திருத்தம் அதைப் பிரதிபலிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
பெர்னாமா


