புதுடில்லி, ஜூன் 18 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த
மாதம் நான்கு நாட்களுக்கு நீடித்த போர் இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பலனாக முடிவுக்கு
வந்ததே தவிர அமெரிக்காவின் சமரச முயற்சியினால் அல்ல என்பதை
நேற்று அமெரிக்க அதிபருடன் நடத்தி சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடி வலியுறுத்தியதாக இந்திய உயர் அரச தந்திரி ஒருவர்
கூறினார்.
அமெரிக்காவின் சமரசப் பேச்சுகளுக்குப் பின்னர் தெற்காசியாவைச் சேர்ந்த அவ்விரு அணுவாயுத நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டதாகவும் போருக்கு பதிலாக வர்த்தகத்தில் கவனம் செலுத்தும்படி அவ்விரு நாடுகளையும் தாம் அப்போது கேட்டுக் கொண்டதாகவும் டிரம்ப் கடந்த மாதம் கூறியிருந்தார்.
அக்காலக்கட்டத்தில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்தோ
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் குறித்தோ எந்த
சந்தர்ப்பத்திலும் பேச்சு நடைபெறவில்லை என்பதை அதிபர் டிரம்பிடம்
மோடி எடுத்துரைத்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம்
மிஸ்ரி கூறினார்.
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடப்பு இராணுவ வழிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியா, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதை கடந்த காலங்களில்
ஏற்றுக் கொள்ளவில்லை என்பதோடு இனியும் அவ்வாறு செய்யாது என
மோடி அந்த சந்திப்பில் வலியுறுத்தினார் என்றார் அவர்.
கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரமுகராக கலந்து கொண்டுள்ள
மோடி அப்பயணத்தின் போது அதிபர் டிரம்புடன் தொலைபேசி வழி
உரையாடினார். அந்த உரையாடல் 35 நிமிடங்களுக்கு நீடித்தது.


