ஷா ஆலம், ஜூன் 18 - சிலாங்கூரில் உள்ள பொழுதுபோக்கு முகாம் மற்றும் சூழியல் சுற்றுலா பகுதிகளில் குறிப்பாக, சுற்றுச்சூழல் தாக்கம் நிறைந்த பகுதிகள் விரைவில் கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படலாம்.
கடந்த ஆண்டு நிலவரப்படி முகாம் நடத்துநர்கள் எண்ணிக்கை 150 முதல் 250 வரை அதிகரித்துள்ளதால் மாநில அரசு கூடுதலாக இலக்கு வைக்கப்பட்ட உரிம கட்டமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்கும் ஏற்கனவே உள்ள நடத்துநர்கள் விதி பின்பற்றலை அமல்படுத்துவதற்கும் முகாம் திட்டமிடல் வழிகாட்டுதல்கள் (ஜி.பி.பி.) ஊராட்சி மன்றங்களால் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலா துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
பொழுபோக்கு முகாம் தளங்களின் திட்டமிடல் ஒப்புதல் மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டிற்கான அடித்தளமாக ஜி.பி.பி. செயல்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பிளான் மலேசியாவால் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபரில் சிலாங்கூர் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி பி.பி., ஆறு முக்கிய திட்டமிடல் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது. பாதுகாப்பு, வசதி நிலைத்தன்மை, சமூக தொடர்ச்சி, பொருளாதார செழிப்பு மற்றும் சட்ட இணக்கம் ஆகியவையே அந்த ஆறு கொள்கைகளாகும்.


