ஜகார்த்தா, ஜூன் 18- இங்குள்ள லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை குமுறல் காரணமாக இந்தோனேசியவின் சுற்றுலா தீவான பாலிக்கு செல்லும் பல விமானங்கள் தங்கள் சேவையை ரத்து செய்துள்ளன.
அதே சமயம், கிழக்கு நூசா தெங்காரா மாநிலத்தில் உள்ள மௌமேரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு நூசா தெங்காராவில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை நேற்று வெடித்து 11 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது. இதனால் நாட்டின் எரிமலையியல் நிறுவனம் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இன்று காலை மீண்டும் ஏற்பட்ட எரிமலைக் குமுறல் காரணமாக ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வானில் சாம்பல் சூழ்ந்ததாக அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பாலிக்கு செல்லும் பல அனைத்துலக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக பாலி அனைத்துலக விமான நிலைய வலைத்தளம் கூறியது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்றும் நாளையும் மௌமேரில் உள்ள பிரான்சிஸ்கஸ் சேவேரியஸ் சேடா விமான நிலையத்தை அரசாங்கம் மூடியுள்ளது என்று விமான நிலைய நடத்துநரான ஏர்நேவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டது.
இந்த வெடிப்பு காரணமாக எரிமலைக்கு அருகிலுள்ள இரண்டு கிராமங்களில் வசிக்கும் டஜன் கணக்கான மக்களை வெளியேறும்படி உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக உள்நாட்டு பேரிடர் தணிப்பு நிறுவனத்தின் அதிகாரியான அவி ஹாலன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அவ்விரு கிராமங்களிலும் உள்ள சாலைகளில் அடர்த்தியான சாம்பல், கற்கள் மற்றும் மணல் நிரம்பியிருந்தன என்றும் எனினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


