ஜெர்த்தே, ஜூன் 18 - இல்லாத மருந்து விற்பனைத் திட்டத்தில் தனித்து வாழும் தாய் ஒருவரை ஏமாற்றி சேர வைத்து அவருக்கு 52,000 வெள்ளி இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாற்பது வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் நேற்று மாலை 3.20 மணியளவில் கிளந்தான், மாச்சாங்கில் உள்ள அவரது வீட்டின் முன் கைது செய்யப்பட்டதாக பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அசாமுடின் அகமது@அபு கூறினார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் மிச்சாட் செயலி மூலம் அறிமுகமான ஒரு சந்தேக நபரால் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அறிமுகமான காலத்தில் சந்தேக நபர் ஒரு ஹோமியோபதி மருந்து விற்பனை வாய்ப்பினை வழங்கினார். அதன் பின்னர் அவ்வாடவர் மீது நம்பிக்கை கொண்ட அம்மாது மருந்து இயந்திரத்தை வாங்குவதற்காக
கடந்தாண்டு மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இரண்டு பணப் பரிவர்த்தனைகளைச் செய்தார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி செபராங் ஜெர்த்தேயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சந்தேக நபரிடம் 7,000 வெள்ளி ரொக்கத்தை 43 வயதான பாதிக்கப்பட்டவர் கொடுத்துள்ளார்.
கடைசியாக அந்த ஆடவர் மீது சந்தேகம் கொண்ட பாதிக்கப்பட்டப் பெண், வாங்கிய பொருள்களுக்கு ரசீது ஆதாரத்தைக் காட்டுமாறு சந்தேக நபரிடம் கேட்டுள்ளார். ஆனால், சந்தேக நபர் அதனைக் காட்டத் தவறியதோடு பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி பின்னர் தலைமறைவாகி விட்டார் என்று அசாமுடின் கூறினார்.
சந்தேக நபர் இன்று பெசுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக்காவல் அனுமதி பெறப்படும் என்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


