சிங்கப்பூர், ஜூன் 18- இங்குள்ள குல் டிரைவில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 812,384 சிங்கை டாலர் மதிப்புள்ள (S$1=ரி.ம.3.30) சிகரெட் வரி மற்றும் பொருள், சேவை வரியை (ஜி.எஸ்.டி.) செலுத்தாமல் ஏய்ப்பு செய்த சந்தேகத்தின் பேரில் மூன்று மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இமாமாதம் 10 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது 24, 30 மற்றும் 40 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட இரு வாகனங்களில் பழுப்பு நிறப் பெட்டிகளை மாற்றுவதை அதிகாரிகள் கண்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பின்னர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதில் ஒரு டிரெய்லரில் வரி செலுத்தப்படாத 7,400 அட்டைப் பெட்டிகளும் பல்நோக்கு வாகனத்தில் மேலும் 100 அட்டைப் பெட்டிகளும் இருப்பதைக் கண்டறிந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அதோடு இரண்டு வாகனங்களும் வரி விதிக்கப்படாத சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று சுங்கத் துறை கூறியது,
இரண்டு வாகனங்களும் தனித்தனியாக சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளன.
30 வயதான சந்தேக நபர் தனது டிரெய்லர் லோரியில் காபி பொருட்கள் நிறைந்த பெட்டியில் வரி விதிக்கப்படாத சிகரெட்டுகளை மறைத்து மலேசியாவிலிருந்து கொண்டு வந்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்தது.
24 வயதான சந்தேக நபர் அந்த சிகரெட்டுகளை எம் பி.வி. வாகனத்திற்கு மாற்ற உதவியுள்ளார். அதே நேரத்தில் 40 வயதான நபர் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிகரெட்டுகளை விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.
வரி விதிக்கப்படாதப் பொருட்களை வாங்குவது, விற்பது, எடுத்துச் செல்வது, அனுப்புவது, சேமித்து வைப்பது அல்லது கையாள்வது சுங்கச் சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும்.
குற்றவாளிகளுக்கு வரித் தொகையை விட 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் ஜி.எஸ்.டி. ஏய்ப்பு குற்றத்திற்கு ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


