காஸா/டெல் அவிவ், ஜூன் 18- காஸா பகுதியில் உள்ள மனிதாபிமான உதவி விநியோக மையத்திற்கு அருகில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை ஹமாஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் (டி.பி.ஏ.) வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதல் காரணமாக தென் பிராந்தியத்தில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் நடத்தும் சுகாதார தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இது குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ராஃபா மற்றும் கான் யூனிஸ் நகரங்களுக்கு இடையிலான பகுதியில் விநியோக மையம் நோக்கி சிலர் நடந்தும் வாகனங்களிலும் சென்று கொண்டிருந்த போது இஸ்ரேலியப் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தகவலை சுயேச்சை அமைப்பினால் சரிபார்க்க முடியவில்லை. இஸ்ரேலிய இராணுவம் இந்த அறிக்கை குறித்து இன்னும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை கிட்டத்தட்ட மூன்று மாதத் தடைக்குப் பின்னர் கடந்த மாதம் காஸா பகுதியில் தனது பணியைத் தொடங்கியது.
இதற்கு முன்பு நடந்த பல சம்பவங்களில் விநியோக மையங்களுக்கு அருகில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றாத நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் முன்பு கூறியது.


