தெஹ்ரான், ஜூன் 18 - கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வரும்
இராணுவத் தாக்குதல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கையை நோக்கமாக
கொண்டது என்றும் பதிலடித் தாக்குதல் வெகு விரைவில் தொடரும்
என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதுநாள் வரை நடத்தப்பட்ட தாக்குதல் தடுப்புக்கான
முன்னெச்சரிக்கையாக விளங்கியது. தண்டனை நடவடிக்கை வெகு
விரைவில் ஆரம்பமாகும் என்று ஈரானின் ஆயுதப்படைத் தளபதி ஜெனரல்
அப்டுல்ரஹிம் மௌசவி கூறியதாக ஈரானின் இர்னா செய்தி நிறுவனம்
தெரிவித்தது.
காஸா மற்றும் லெபனான் மீது மேற்கொண்டு ஏறக்குறைய 300
ஊடகவியலாளர்களைப் கொன்றதன் மூலம் இஸ்ரேல் அனைத்துலகச்
சட்டத்தை மீறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தெஹ்ரானில் உள்ள ஈரான் ஒளிபரப்புக் கழக அலுவலகம் மீது இஸ்ரேல்
மேற்கொண்ட தாக்குதலை கடுமையாகச் சாடிய அவர், ஊடகச்
சுதந்திரத்தை முடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டச் சதி
இதுவெனக் கூறினார்.
ஈரான் ஒளிபரப்புக் கழக ஊழியர்களை இஸ்ரேல் மிகக் கொடூரமாகத்
தாக்கியுள்ளது. உண்மையின் குரலை நெறிக்க வேண்டும் என்பதற்காக
அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலகச் சட்டங்களை அது புறக்கணித்துள்ளது
என்றார் அவர்.
தாங்கள் சிந்திய இரத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான்
மக்கள் இராணுவத்துடன் ஒன்றிணைந்து போராடுவர் என்றும் அவர்
தெரிவித்தார்.


