பட்டர்வொர்த், ஜூன் 18 - செபராங் பிறை தெங்கா தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் 81 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான அனுமதிக்கப்படாத பட்டாசுகள் அடங்கிய 9,053 பெட்டிகளை பொது நடவடிக்கைப் படையின் வடக்கு படைப்பிரிவு பறிமுதல் செய்தது.
இந்த அமலாக்க நடவடிக்கையில் பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைப்பதைத் தடுப்பதில் தனது குழுவினர் வெற்றி பெற்றதோடு உள்ளூர் நபர் ஒருவரையும் கைது செய்ததாக வடக்கு படைப்பிரிவுத் தளபதி எஸ்ஏசி ஷாரும் ஹாஷிம் தெரிவித்தார்.
அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளும் சிலாங்கூர் மாநிலத்தின் போர்ட் கிள்ளான் துறைமுகத்திலிருந்து நாட்டின் வடக்குப் பகுதியில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கண்டறிய 1967ஆம் ஆண்டு
சுங்கச் சட்டத்தின் 135(1)(d) பிரிவு மற்றும் 1957ஆம் ஆண்டு
வெடிபொருள் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


