கோலாலம்பூர், ஜூன் 18 - முகமூடி அணிந்த ஆடவர்கள் நடத்திய
கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரு உள்நாட்டு ஆடவர்கள்
உயிரிழந்தனர். இச்சம்பவம் செராஸ், ஜாலான் லோக் இயூ பல்பொருள்
விற்பனை மையம் ஒன்றின் எதிரே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பின்னிரவு 12.48 மணியளவில்
தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் துணைப் போலீஸ்
தலைவர் டத்தோ முகமது யுசுப் ஜான் முகமது கூறினார்.
இச்சம்பவத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறிய அவர், சந்தேக நபர்களை
அடையாளம் காண்பதற்கும் கொலைக்கான நோக்கத்தை கண்டறிவதற்கும்
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின்
302வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர்
மேலும் சொன்னார்.
ஆடவர் கும்பல் ஒன்று இரு ஆடவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி
விட்டு தப்பியோடுவதை சித்தரிக்கும் 21 விநாடி காணொளி சமூக
ஊடங்களில் வைரலானது.


