கோலாலம்பூர், ஜூன் 17 — நான்கு ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் ஒருவரிடம் 11 லட்சம் வெள்ளியைக் கொள்ளையிட்ட வழக்கில் இரு போலீஸ் கார்ப்ரல்கள் உட்பட நான்கு பேருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதித்தது.
வழக்கு விசாரணையின் முடிவில் நியாயமான சந்தேகங்களை எதித்தரப்பு எழுப்பத் தவறியதைக் கண்டறிந்த பின்னர் நீதிபதி ஹமிடா முகமது டெரில் இடைநீக்கம் செய்யப்பட்ட கார்ப்ரல்களான ஹஸ்ரோல் இர்மி அபு ஹாசிம் (வயது 36), முகமது ஹெல்மி ஜமாலுடின் (வயது 34), அமீர் மொக்தார் (வயது 47) மற்றும் முகமது ரிட்வான் அஸ்மான் (வயது 39) ஆகியோருக்கு இத்தண்டனையை விதித்தார்.
இதன் அடிப்படையில் நான்கு குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஐந்து பிரம்படிகளையும் நீதிமன்றம் விதிக்கிறது. அவர்களுக்கு எதிரான சிறைத் தண்டனை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று அவர் தனது தீர்ப்பில் கூறினார்.
தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் நூர் அசிமுல் அசாமி முகமது நோர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். எனினும் இதற்கு முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஹமிடாஅறிவுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. 35 அரசுத் தரப்பு சாட்சிகள் சாட்சியமளித்தனர்.
அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் முகமது இக்வான் முகமது நாசீர் வழக்கை நடத்திய வேளையில் வழக்கறிஞர்கள் நூர் அசிமுல் அசாமி மற்றும் லிம் யோய் பிங் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் சார்பிலும் ஆஜராகின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் ஜாலான் சான் சாவ் லின் பகுதியில் உள்ள ஒரு கட்டிட கார் நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்தி 26 வயது இளைஞரிடம் இருந்து 11 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை கொள்ளையடித்ததாக அந்த நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397வது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.


