கோலாலம்பூர், ஜூன் 17 - ஆசியான் ஒருங்கிணைப்பின் முக்கிய ஆதரவாளரான ஏர் ஆசியா, ஆசியானின் 10 உறுப்பு நாடுகளில் உள்ள 57 இடங்களுக்குப் பயணிக்க தகுதியுள்ள 12,000 ஊடகவியலாளர்களுக்கு 50 சதவீதத் தள்ளுபடியை வழங்குகிறது.
அதாவது சாதாரண விமானச் சேவையிலிருந்து வட்டாரத்தின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனங்களில் ஒன்றாக தற்போது ஏர் ஆசியா மாறியதற்கான பயணத்தில், ஊடகங்கள் ஆற்றிய பங்கை பாராட்டி இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதன் இணை நிறுவனரும், கேபிடல் ஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
"எங்களுடன் ஆசியான் நாடுகளுக்குப் பயணம் செய்வதன் மூலம் அந்நாடுகளை நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பு கிட்டும். எனவே, ஆசியானை நன்கு அறிந்துகொள்ள 12,000 ஊடகவியலாளர்களுக்கு இந்த 50 சதவீதக் கழிவை நாங்கள் வழங்குகிறோம்," என்றார் அவர்.
இவ்வாண்டு ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்றிருப்பதை நினைவுகூர, அர்த்தமுள்ள வழிகளைக் கண்டறியுமாறு, அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா


