லுமுட், ஜூன் 17 - ஜிஎஸ்டி வரியை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி சமூகத்தின் அனைத்து மட்டங்களையும், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களை பாதிக்கும் என்பதால் அதை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை.
ஜி.எஸ்.டி என்பது வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பயனீட்டாளர்களுக்கும் சமமாக விதிக்கப்படும் ஒரு விரிவான வரியாகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி சிறந்தது என்று எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தப் போதிலும், தற்போதைய அரசாங்கம் வாழ்க்கைச் செலவின நெருக்குதல்களை எதிர்கொள்ளும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால், அதை ஒத்தி வைக்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அன்வார் விளக்கினார்.
மேலும், அரசாங்கம் தற்போது விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்.எஸ்.டியை, குறிப்பாக உயர் வருமானம் கொண்ட குழுவினர் பொதுவாக வாங்கும் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர பொருட்களுக்கு நீட்டித்து வருவதாக அன்வார் கூறினார்.
பெர்னாமா


