கோலாலம்பூர், ஜூன் 17 - மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று காலமானார். அன்னாருக்கு வயது 76.
முன்னாள் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் இன்று காலை 8.00 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானதை மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
கடந்த 1949 மார்ச் 1ஆம் தேதி பினாங்கில் பிறந்த பழனிவேல், 1973 ஆம் ஆண்டு பூஜாங் பள்ளத்தாக்கு திட்டத்திற்கான தேசிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார்.
பின்னர் 1977 ஏப்ரல் மாதம் மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தில் (பெர்னாமா) மூத்த பத்திரிகையாளராகச் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டில் அவர் அந்த நிறுவனத்தில் உள்நாட்டு மற்றும் பொருளாதார செய்திகளுக்கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1987 முதல் 1990 வரை அப்போது பொதுப்பணி அமைச்சராக இருந்த துன் எஸ். சாமிவேலுவின் பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1970களின் முற்பகுதியில் இருந்து மஇகா மூலம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 1990ல் முதல் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.
1990 ஆம் ஆணாடு பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2008 ஆம் ஆண்டு அந்தத் தொகுதியை இழப்பதற்கு முன்பு தொடர்ந்து நான்கு முறை எம்.பி.யாகப் பணியாற்றினார்.
பழனிவேல் 2013 ஆம் ஆண்டு கேமரன் மலை எம்.பி.யாக நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.


