ஷா ஆலம், ஜூன் 17- மாநில அரசு கடந்த 2022ஆம் ஆண்டு முதல்
அமல்படுத்தி வரும் சிலாங்கூர் மெரிடைம் கேட்வே (எஸ்.எம்.ஜி.)
திட்டத்தின் வாயிலாக கிள்ளான் ஆற்றின் தரம் கணிசமான அளவு
உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த ஆற்றில் நீரின் தரம் 5வது தர
நிலையிலிருந்து 3ஆம் தர நிலைக்கு உயர்ந்துள்ளதாக லண்டாசான்
லுமாயான் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைபுல்
அஸ்மின் நோர்டின் கூறினார்.
கிள்ளான் ஆற்றை சுத்தம் செய்யும், ஆழப்படுத்தும் மற்றும்
அகலப்படுத்தும் பணிகளை உள்ளடக்கிய இந்த திட்டம் குறிப்பிடத்தக்க
பலன்களைத் தரத் தொடங்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
கிள்ளான் ஆற்றின் படுகையில் மொத்தம் 25 தொழில்பேட்டைப் பகுதிகள்
உள்ளன. இது அந்த ஆற்றை புனரமைக்கும் பணிக்கு பெரும் சவாலாக
உள்ளது. இது தவிர ஆற்றின் தரத்தைப் பாதிக்கக்கூடிய நிறைய மனித
அம்சங்கள் காணப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் ஆற்றை ஆண்டின் 365 நாட்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு
நாட்கள் மூன்றாம் தர நிலையில் வைத்திருக்க நாங்கள் நோக்கம்
கொண்டுள்ளோம் என்றார் அவர்.
நேற்று ஊடகவியலாளர்களுடன் கிள்ளான் ஆற்றின் 15 கிலோ மீட்டர்
பகுதியில் உள்ள எஸ்.எம்.ஜி. வெள்ளத் தடுப்பு திட்டங்களை
பார்வையிட்டப் பின்னர் அவர் இதனைக் கூறினார்.
மலேசியாவில் உள்ள ஆறுகள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில்
1 முதல் 3 வரையிலான தர நிலையைக் கொண்ட ஆறுகள் குடிநீராகப்
பயன்படுத்துவதற்கு தகுதி உள்ளவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் கிள்ளான் ஆற்றின்
படுகையிலிருந்து 918,936.7 கியூப் மீட்டர் குப்பைகள் அகற்றப்பட்டதாக
கூறிய அவர், இதன் மூலம் ஆற்றின் நீர் கொள்ளளவு 18 விழுக்காடு
அதிகரித்தது என்றார்.


