அம்மான்/இஸ்தான்புல், ஜூன் 17- ஈரான் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து மொத்தம் 21 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
பிராந்திய பதற்றங்களைத் தீர்க்கவும் பாகுபாடு இன்றி அணு ஆயுதக் குறைப்பைச் செயல்படுத்தவும் அனைத்துலகச் சட்டம் மதிக்கப்படவும் வேண்டும் என அந்நாடுகள் கோரிக்கை விடுத்ததாக அனடோலு ஏஜென்சி தெரிவித்தது.
எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்டெலட்டியின் முன்னெடுப்பின் விளைவாக இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது என்று எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மினா கூறியது.
இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள நாடுகளில் துருக்கி, ஜோர்டான், ஐக்கிய அரபு சிற்றரசு, பாகிஸ்தான், பஹ்ரின், புருணை, சாட், காம்பியா, அல்ஜீரியா, கொமொரோஸ், ஜிபூட்டி, சவுதி அரேபியா, சூடான், சோமாலியா, ஈராக், ஓமன், கத்தார், குவைத், லிபியா, எகிப்து மற்றும் மவுரித்தேனியா ஆகியவையும் அடங்கும்.
ஈரானிய பிரதேசத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அனைத்துலக சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) சாசனத்தை மீறுவதாக அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நல்ல அண்டை நாடுகளின் கொள்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். அதே நேரத்தில் அனைத்து சர்ச்சைகளும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து அமைச்சர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் தாக்கங்களை இது ஏற்படுத்தி இருப்பதாக எச்சரித்தனர்.
ஈரான் மீதான அனைத்து வகையான தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை அவர்கள் வலியுறுத்தியதோடு போர்நிறுத்தத்தை அடைவதற்காக பதற்றங்களைத் தணிக்க விரிவான முயற்சிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.


