ஜோகூர் பாரு, ஜூன் 17- வாட்ஸ்அப் செயலி வழி நடத்தப்படும் முதலீட்டு
மோசடித் திட்டத்தில் பங்கு கொண்ட 67 வயது முதியவர் ஒருவர் தனது
சேமிப்புத் தொகையான 17 லட்சம் வெள்ளியை பறிகொடுத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ‘சி-10 ஃபிரீமேன் சஹாம் 17‘ எனும் புலனக்குழுவில்
தனது தொலைபேசி எண் இணைக்கப்பட்டது குறித்து தனியார் நிறுவன
நிர்வாகியிடமிருந்து காவல் துறை கடந்த ஜூன் 12ஆம் தேதி புகாரைப்
பெற்றதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார்
கூறினார்.
நடப்பு சந்தை நிலவரப்படி அதாவது ஐந்து முதல் பத்து விழுக்காடு
வரையிலான லாபத் தொகை பங்கேற்கும் முதலீட்டு திட்டத்தின்
அடிப்படையில் வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டது என அவர்
குறிப்பிட்டார்.
இந்த முதலீட்டுத் திட்டத்தினால் கவரப்பட்ட அந்த முதியவர் கடந்த ஏப்ரல்
16 முதல் மே 30 வரை 12 பரிவர்த்தனைகள் மூலம் 17 லட்சத்து 72
ஆயிரத்து 603 வெள்ளியை ஐந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.
பணத்தைச் செலுத்திய நிலையில் வாக்குறுதியளிக்கப்பட்ட படி எந்த
லாபத் தொகையும் பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்கவில்லை. மாறாக
மேலும் 500,000 வெள்ளிச் செலுத்தும்படி அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர்
இது குறித்து போலீசில் புகார் அளித்ததாக குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
குறைந்த காலக்கட்டத்தில் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என ஆசை
வார்த்தை காட்டும் இணைய முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும் அதேவேளையில் அதன்பால் எளிதில் ஈர்க்கப்படவும் கூடாது
என்று பொது மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.
வழங்கப்படும் முதலீட்டுத் திட்டங்களின் உண்மைத் தன்மையை அறிய
அரச மலேசிய போலீஸ் படை, பேங்க் நெகாரா, பங்குச் சந்தை ஆணையம்
உள்ளிட்டத் தரப்பிரைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

