இஸ்தான்புல், ஜூன் 16 — ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து குறைந்தது 224 பேர் கொல்லப் பட்டுள்ளதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேலிய இராணுவம் நாட்டில் உள்ள தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களின் விளைவாக 224 ஈரானிய குடிமக்கள் பலியானதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அதிகாரப்பூர்வ மெஹர் செய்தி நிறுவனம் இன்று அதிகாலை தெரிவித்தது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,481 பேரை எட்டியுள்ளதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர் தெரிவித்தார்.
அவர்களில் 1,277 பேர் சிகிச்சைக்காக பல்கலைக்கழக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறார்களாவர் என கெர்மன்பூர் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிய அணுசக்தி மற்றும் ஏவுகணை வளாகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இராணுவத் தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய இலக்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

