கோலாலம்பூர், ஜூன் 16- கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலுள்ள கார் கழுவும் மையத்திலிருந்து வாடிக்கையாளரின் வாகனம் சுவரில் மோதி தரையில் விழுந்ததில் கார் கழுவும் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று மாலை 5.38 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் 23 வயது ஆப்கானிஸ்தான் நபர் ஓட்டிச் சென்ற அந்த டோயோட்டா கேம்ரி கார் கடுமையாகச் சேதமடைந்தாக
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி முகமது ஜம்சூரி முகமட் இசா கூறினார்.
அந்த மையத்தில் கார் கழுவுபவராக பணிபுரிந்த அந்நபர் வாடிக்கையாளரின் வாகனத்தை கழுவிய பின் நிறுத்த முயன்றபோது அது கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
அவர் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் வாகனம் சுவரில் மோதி மூன்றாவது மாடியில் இருந்து தரையில் விழுந்தது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் ஐரிஸ் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாக நம்பப்படுகிறது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இருப்பினும், சம்பவம் நடந்தபோது இரண்டு கார்களின் உரிமையாளர்களும் வாகனத்தில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
.
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அந்த ஆடவர் சிகிச்சைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் சிவப்பு மண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது


