கோலாலம்பூர், ஜூன் 16- அரசு சாரா அமைப்பினால் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 2 கோடியே 60 லட்சம் வெள்ளியை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் ஐவரை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைத்துள்ளது.
சிலாங்கூர், மலாக்கா, பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அந்த அரசு சாரா அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிதி அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.
கைது செய்யபட்டவர்களில் நால்வர் வரும் புதன் கிழமை வரையிலும் மேலும் ஒருவர் வியாழக்கிழமை வரையிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக அந்த ஐவரும் அந்த அமைப்புக்குச் சொந்தமான நிதியை தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியதாக நம்பப்படுகிறது மேலும் சிரியா நாட்டில் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக குளம் வெட்டும் பணிக்கு கிடைத்த நிதியில் எஞ்சியத் தொகையை அவர்கள் மறைத்து விட்டதாக தெரியவந்துள்ளது.
அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை பெர்னாமாவிடம் உறுதிப்படுத்திய எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து 80 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கைப்பற்றபட்ட சொத்துகளில் 100,000 வெள்ளி மதிப்புள்ள நகைகள், 10 லட்சம் வெள்ளி ரொக்கம், 650,000 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கிரிப்டோ கணக்குகள், 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நான்கு வீடுகளும் அடங்கும் என்றார் அவர்.
மேலும், விசாரணைக்காக 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 14 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.


