கோலாலம்பூர், ஜூன் 16- மனிதர்களின் அனைத்துப் பணிகளையும் செய்யும் ஆற்றலை செயற்கை நுண்ணறிரவு (ஏ.ஐ.) கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும் தனிநபர்களின் பணிகளை குறிப்பாக ஊடகத் துறையை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆற்றல் அதற்கு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்பட்பத்தின் மேம்பாட்டிற்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டதே தவிர மனிதர்களின் நுண்ணறிவை ஈடு செய்யும் நோக்கில் அல்ல என்று மீடியா சிலாங்கூர் முதன்மை ஆசிரியர் கைருள் நிஸாம் பாக்கிரி கூறினார்.
முன்பு, பத்திரிகை அறிக்கை கிடைத்தவுடன் அதனை நாம் படித்து புரிந்து கொண்டு மறுபடியும் எழுத வேண்டும். எனினும், இப்போது ஏ.ஐ.யில் பதிவேற்றம் செய்தால் 15 வினாடிகளில் அறிக்கை முழுமையாக தயராகிவிடும். இந்த அச்சத்தை நானும் உணர்ந்திருக்கிறேன்.
இருப்பினும், நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கூகுள் மற்றும் கூகுள் செர்ச் போன்ற இயங்குதளங்களுக்கு மாற்றாக ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. ஏ.ஐ. நாம் சிந்திக்கும் முறையை மாற்றுவதோடு பணிகளையும் எளிதாக்கி விடுகிறது. ஏ.ஐ. பயன்பாட்டை கிரகித்துக் கொள்ள இயலாதவர்கள் வேலையை இழக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
2025 தேசிய பத்திரிகையாளர் தினத்தை (ஹவானா) முன்னிட்டு சன்வே பேரங்காடியில் நடைபெற்ற மீடியா சிலாங்கூரின் “நம்பிக்கை, வழிமுறைகள், ஏ.ஐ. புதிய சகாப்த செய்தி அறை“ எனும் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு நெறியாளரான ஆஸ்ட்ரோ அவாணி சோசியல் மீடியா தலைவர் ஹிலால் அஸ்மி பேசுகையில், ஊடகத் துறையில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் இளம் பட்டதாரிகளுக்கு ஏ.ஐ. பெரும் சவாலாக விளங்கி வருகிறது என குறிப்பிட்டார்.


