லண்டன், ஜூன் 1- ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெறும் நிலையில் தெஹ்ரானில் உள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் ஈரானியர்களுக்கு இஸ்ரேல் நேற்று வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் இந்த தளங்களைத் தாக்கும். மேலும் தெஹ்ரானிலும் எல்லா இடங்களிலும் உள்ள ஈரானிய அணுசக்தி மையங்களையும் மற்றும் ஆயுத அமைப்புகளையும் அது குறிவைக்கும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஈரானில் உள்ள ஆயுத வளாகங்களுக்கு அருகில் வசிக்கும் ஈரானியர்களுக்கு இஸ்ரேல் முன்னதாகவே வெளியேற்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அரபு மற்றும் ஃபார்சி மொழிகளில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கை அனைத்து ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் துணை வளாகங்களுக்கும் பொருந்தும் என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தனது மிகப்பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதும், ஈரானின் பாலிஸ்டிக் எனப்படும் நீண்ட தூரம் பாயக்கூடிய உந்து விசை ஏவுகணை ஆற்றலை அகற்றுவதும் அதன் குறிக்கோள் என்று கூறியது.


