MEDIA STATEMENT

ஐ.ஜி.பி. பதவி காலம் ஜூன் 22ஆம் தேதி முடிவடைகிறது- ரஸாருடின் உறுதிப்படுத்தினார்

16 ஜூன் 2025, 9:45 AM
ஐ.ஜி.பி. பதவி காலம் ஜூன் 22ஆம் தேதி முடிவடைகிறது- ரஸாருடின் உறுதிப்படுத்தினார்

கோல பிலா, ஜூன் 16- தாம் வகித்து வரும் தேசிய போலீஸ் படைத்தலைவர் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி முடிவுக்கு வருவதை டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் உறுதிப்படுத்தினார்.

புதியவர்களுக்கு வழி விடும் வகையில் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வேண்டாம் என்ற தனது தாயார் ரஹ்மா அப்துல் ரஹ்மான் (வயது 80) விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார்.

இதுதான் எனது கடைசி நிகழ்ச்சி. எந்த மாறுதலும் இல்லாத பட்சத்தில் வரும் 20ஆம் தேதி பதவி ஒப்படைப்பு மற்றும் பதவி ஏற்பு சடங்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

முடிந்தவரை ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று எனது தாயார் என்னை அறிவுறுத்தினார். இதனை முதன் முறையாக கூறுகிறேன். மேலும், எனது ஒப்பந்தம் இயல்பாக காலாவதியாவதால் அதனை நீட்டிக்க வேண்டிய அவசியமும் எழவில்லை என்று அவர் கூறினார்.

எனது தாயார் தனது விருப்பத்தைச் சொன்ன போது அதனை நான் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டேன். அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தை வேதம் போன்றது. எனது தாயார் விரும்பும் எதனையும் நிராகரிக்கும் துணிவு எனக்கில்லை என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற தேசிய போலீஸ் படைத் தலைவரின் 2025 மடாணி சமூக நல்லிணக்க கிராமத் தத்தெடுப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

பதவி விலகல் தொடர்பான தனது விருப்பத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்ததாக ரஸாருடின் கூறினார்.

ஈராண்டு பதவி காலம் போதுமானது என்பதால் அதனை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய அவர், புதியவருக்கு வழி விடுவது அவசியம் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.