லுமுட், ஜூன் 15 - கடலோர காவல் போர் கப்பல் (எல்.சி.எஸ்.) கட்டுமானத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று லுமுட் அரச மலேசிய கடற்படை தளத்திலுள்ள லுமுட் நேவல் ஷிப்யார்ட் கடற்படை கப்பல் கட்டும் தளத்திற்கு (லுனாஸ்) வருகை புரிந்தார்.
பிரதமருடன் துணை பாதுகாப்பு அமைச்சர் அட்லி ஜஹாரி மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் டான் ஸ்ரீ முகமட் நிஜாம் ஜாஃபர் ஆகியோரும் வருகை தந்தனர்.
அரச மலேசிய கடற்படைக்காக ஐந்து எல்.சி.எஸ். கப்பல்களை கட்டும் பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்த விரிவான விளக்கத்தை அன்வார் பெற்றார்.
கடந்த மே 25 ஆம் தேதி நிலவரப்படி கப்பல் கட்டுமானத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றம் 72.43 சதவீதத்தை எட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
லுமுட் நேவல் ஷிப்யார்ட் கப்பல் நிர்மாணிப்புத் திட்டம் சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய நிதி அமைச்சு பொருளாதார அமைச்சு, பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு மற்றும் சட்டத் துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பேணி வருவதாக அது கூறியது.
ஒப்பந்த அட்டவணையின்படி கடந்த மே 23ஆம் தேதி எல் சி.எஸ். 1 வெற்றிகரமாக நீரில் இறக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மேலும் டிசம்பரில் அதன் முதல் கடல் பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எல்.சி.எஸ். 2 ஐ பொறுத்தவரை மே 8 ஆம் தேதி கடலில் ஏவப்பட்டது. தற்போது தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.டி.டபிள்யூ. நடவடிக்கைகள் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அது கூறியது.
அதேபோல் எல்.சி.எஸ். 3 முதல் எல்.சி.எஸ். 5 வரையிலான கப்பல்களின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.


