(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 15- சகல வசதிகளுடன் வாழும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டிவிடுவதில்லை. சிலரை வாழ்க்கையின் உச்சத்தில் வைத்து விடும் இயற்கை பலரை வறுமையின் விளிம்புக்கு தள்ளி விடுகிறது.
பொருளைத் தேடி, அறிவைத் தேடி, அன்பைத் தேடி அலைவோரை கைகொடுத்து உயர்த்தி விடும் உயரிய குணம் எல்லோருக்கும் இருந்து விடுவதில்லை. அத்தகைய குணங்களைக் கொண்டவர்களை மாமனிதர்களாக போற்றுவதில் தவறும் இல்லை.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தங்குமிடம் தந்து, கல்வி தந்து, விளையாட்டுகளிலும் இதர புறப்பாட நடவடிக்கைகளிலும் ஆற்றலைத் தந்து உயரிய நிலைக்கு உயர்த்தும் உன்னதப் பணியை மேற்கொண்டு வருகிறது மைகித்தா எனப்படும் உலு சிலாங்கூர் கித்தா சமூக அமைப்பு.
கெர்லிங், தாமான் அங்காசாவில் இயங்கி வரும் இந்த அமைப்பு இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக சூரியன் ஆசிரமம் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக குருகுலம் என இரு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் மொத்தம் 36 மாணவர்கள் தங்கி அருகிலுள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
உலு சிலாங்கூர் வட்டார மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் இளைஞர்களால் இந்த மைகித்தா அரசு சாரா அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறுகிறார் அதன் நிறுவனர்களில் ஒருவரான கனகராஜா அழகேசன்.
இந்த அமைப்பின் முன்னெடுப்புகளில் மிக முக்கியமானது குறைந்த வருமானம் பெறும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக தங்கும் விடுதியை அமைத்ததாகும் என அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் உகந்த சூழலில் கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த ஆசிரமம் கடந்த 2020ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதேசமயம் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கி வரும் மாணவர் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் குருகுலத் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த குருகுலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 29 பேராக உயர்வு கண்டது.
இந்த இரு ஆசிரமங்களிலும் தங்கியுள்ள மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு உலு சிலாங்கூர் மாவட்ட பள்ளிகள் விளையாட்டு மன்ற கோல்ப் போட்டியில் களும்பாங் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்த மைகீத்தா குருகுலம் மற்றும் ஆசிரம மாணவர்கள் பல வெற்றிகளைப் பெற்று சாதனைப் படைத்தனர்.
இந்த ஆசிரமத்தின் பத்தாண்டு கால வரலாற்றில் புதிய மைல் கல்லாக மாணவர் எஸ். சந்தோஷ்குமார் ஆறாம் படிவத்தில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இவ்வளவு சாதனைகளை படைத்து வரும் இந்த ஆசிரமத்தில் தங்கியுள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் 40 பேராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆசிரமம் ஒன்று உருவாகப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக கனகராஜா கூறினார்.
தாமான் அங்காசாவில் வாங்குவதற்கு அடையாளம் காணப்பட்ட புதிய கட்டிடம் அதிக மாணவர்கள் தங்குவதற்குரிய வசதியை கொண்டிருக்கும் அதே வேளையில் நிர்வாகச் செலவினங்களையும் பெருமளவு குறைக்க உதவும்.
இந்த கட்டிடத்தின் விலை 300,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் வழக்கறிஞர் கட்டணம், மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளையும் சேர்த்து எங்களுக்கு 396,000 வெள்ளி தேவைப்படுகிறது.
இதுவரை சுமார் 100,000 வெள்ளி வரை திரட்டப்பட்ட நிலையில் அரசியல் தலைவர்களிடமிருந்தும் நாங்கள் உதவியை பெரிதும் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் இந்த திடாடத்திற்கு 10,000 வெள்ளியை மானியமாக வழங்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
உயரிய நோக்கத்தோடு ஏழைகளுக்கு உதவும் இந்த உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் மைகித்தா அமைப்பின் பொறுப்பாளர்ளுக்கு வெற்றி கிட்ட நாம் வாழ்த்துவோம்.


