ஜோகூர் பாரு, ஜூன் 15- தன்னைப் போன்ற ஒரு நபர் 'டத்தோ அப்துல் மாலிக்' என்பவரிடமிருந்து உதவி பெறுவதை சித்தரிக்கும் டிக்டோக் காணொளியை ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம் குமார் மறுத்துள்ளார்.
அந்த காணொளி உண்மைக்குப் புறம்பானது என்பதோடு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
"டத்தோக் அப்துல் மாலிக் என்ற நபரிடமிருந்து உதவி பெறுவதுடன் அது வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த காணொளி தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று அவர் கூறினார்.
இது தொடர்பில், ஜோகூர் காவல்துறை ஊடகப் பிரிவின் அதிகாரிகள் அந்த காணொளியின் நம்பகத்தன்மையை மறுத்து ஒரு அறிக்கையை அளித்துள்ளனர்.
இந்த காணொளி தொடர்பில் தற்போது குற்றவியல் சட்டத்தின் 419 மற்றும் 420/511வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மோசடி மற்றும் அவதூறு நோக்கத்திற்காக ஏ ஐ. போன்ற தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஜோகூர் காவல்துறை கடுமையாகக் கருதுவதாக குமார் கூறினார்.
பொதுமக்கள் இந்த காணொளியை மீண்டும் பகிர வேண்டாம் என்றும், சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கத்தை பகிர்வதற்கு முன்பு தகவலின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே நேரத்தில், அதன் பரவல் தொடர்பான தகவல் உள்ள நபர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


