(ஆரா.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 13- சிலாங்கூர் அரசின் 2025ஆம் ஆண்டிற்கான
தமிழ்ப்பள்ளி மானியம் இம்மாத இறுதிக்குள் பகிர்ந்தளிக்கப்படும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.ப்பாபாராய்டு கூறினார்.
இந்த வருடாந்திர மானியத்தைப் பெறுவதற்கு மாநிலத்திலுள்ள 98 தமிழ்ப்பள்ளிகள் விண்ணப்பம் செய்துள்ளதாக அவர் சொன்னார். மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு மாநில அரசு ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் அந்நிதியைப் பெற இவ்வாண்டு 98 பள்ளிகள் விண்ணப்பம் செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அப்பள்ளிகளின் விண்ணப்பங்களை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அங்கீகரித்தைத் தொடர்ந்து அந்த மானியங்கள் இம்மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்படுவதற்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு காண்பதற்கும் அனைத்துத் தரப்பினரும் தங்களின் பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.
ஒரு இனத்தின் அடையாளமாக விளஙகுவது மொழிதான், மொழி அழிந்தால் இனமும் அழிந்து விடும். ஆகவே பெற்றோர்கள் இதனை உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தமிழப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


