குவாந்தான், ஜூன் 15- இங்கு அருகிலுள்ள ஜாலான் குவாந்தான்-மாரான் 12வது மைலில் நேற்று மாலை நிகழ்ந்த கார் மற்றும் டிரெய்லர் லாரி சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயமடைந்தனர்.
காரின் பின்இருக்கையில் பயணித்த நோரிஹான் முஸ்தாபா (வயது 57) என்ற ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் லோரி ஓட்டுநரான ஜெயவர்மன் முருகன் (வயது 24) குவாந்தான், தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் புசு கூறினார்.
மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தின்போது
ஜோகூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்று கொண்டிந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிர்த்தடத்தில் பயணித்த டோயோட்டா வியோஸ் கார் மீது மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குவாந்தானிலிருந்து மாரான் நோக்கி சென்று கொண்டிருந்த காரில் மூன்று பேர் பயணித்தனர். நோரிஹானைத் தவிர, கார் ஓட்டுநர் முகமட் ரிட்ஸ்வான் அப் முபின் (வயது 59) முகம் மற்றும் தோள்பட்டையில் காயம் அடைந்தார். மற்றொரு பயணிக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
காரின் ஓட்டுநர் சிகிச்சைக்காக குவாந்தான், தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இரண்டு வாகனங்களும் சோதனைக்காக கணினிமயமாக்கப்பட்ட வாகன ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும் என்றார்.


