தெஹ்ரான், ஜூன் 13 - ஈரானிய தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை பின்னேரம் நடத்தப்பட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் கூறியது.
தெஹ்ரானின் வான் பகுதியில் புகை மூட்டம் எழுவதை காட்டும் காணொளிகளும் உறுதிப்படுத்தப்படாத படங்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகின.
தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடங்களை அப்படங்கள் காட்டின. இந்ந தாக்குதலில் பலியான பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்களைக் கண்டதாக நேரில் கண்ட சாட்சிகளும் அரசு தொலைக்காட்சி செய்தியாளர்களும் தெரிவித்தனர்.
ஈரான் மீது தாங்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவ விவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளேடு கூறியது.
அதே நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சுட்டிக்காட்டியதால் அமெரிக்கா முன்னதாகவே அதன் அத்தியாவசியமற்ற தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றத் தொடங்கியது.
இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக "ஒருதலைப்பட்ச" நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமெரிக்கா இதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில்
கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது தேசிய பாதுகாப்பு மன்றத்தை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் பத்திரிகை நிறுவனம் (டிபிஏ) தெரிவித்தது.


