அகமதாபாத், ஜூன் 13 - இந்தியா, அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
முன்னதாக விமானப் பணியாளர்கள் உள்பட அனைத்து 242 பேரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிர் பிழைத்ததை ஏர் இந்தியா நிறுவனம் தற்போது உறுதிச் செய்துள்ளது.
A11 எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்த 38 வயது ரமேஷ் விஷ்வாஸ் குமார் புச்சார்வடா, விமானம் விழுந்த போது அவசர கதவு வழியாகக் குதித்து உயிர் தப்பியுள்ளார்.
காயங்களுடன் ரமேஷ் நடந்து செல்லும் வீடியோவும், அவரின் விமான டிக்கெட்டும் வைரலாகியுள்ளது. தற்போது ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நேற்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட AI171 விமானம், 3 நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தின் விசாரணைக்காக விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறையின் குரல் பதிவு கருவியைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.


