கோலாலம்பூர், ஜூன் 13 - ஏர் இந்தியா விமானம் விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
அதனால், மலேசியாவிலிருந்து அகமதாபாத்திற்கான ஏர் ஆசியா மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் எவ்வித பாதிப்பும் இல்லை. அவை திட்டமிட்டபடி தொடரும்.
ஏர் ஏசியா மலேசியா தற்போது கோலாலம்பூரில் இருந்து அகமதாபாத்திற்கு வாரத்திற்கு ஐந்து விமானச் சேவைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மலேசியா ஏர்லைன்ஸ் ஒவ்வொரு வாரமும் எட்டு நேரடி விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
விமான நிலையத்திலுள்ள அனைத்து விமான நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தனது x பதிவில் அகமதாபாத் விமான நிலையம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் - அகமதாபாத், அகமதாபாத் - கோலாலம்பூர்க்கான சேவையை ஏர் ஏசியா தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.


