NATIONAL

மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதிக்கு வெ.50,000 மானியம்- பாப்பாராய்டு அறிவிப்பு

13 ஜூன் 2025, 1:40 PM
மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதிக்கு வெ.50,000 மானியம்- பாப்பாராய்டு அறிவிப்பு
மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதிக்கு வெ.50,000 மானியம்- பாப்பாராய்டு அறிவிப்பு
மிட்லண்டஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதிக்கு வெ.50,000 மானியம்- பாப்பாராய்டு அறிவிப்பு

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூன் 13 - இங்குள்ள  செக்சன் 7, மிட்லண்ட்ஸ் தமிழ்பள்ளியின் தங்கும் விடுதியின் பராமரிப்பு செலவுகளுக்காக 50,000 வெள்ளியை மானியமாக வழங்குவதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இப்பள்ளிக்கு வழங்கப்படும் 50,000 வெள்ளி வருடாந்திர மானியம் தவிர்த்து பிரத்தியேகமாக இந்த கூடுதல் மானியம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

நாட்டில் தங்கும் வசதி கொண்ட ஒரே பள்ளியாக மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி விளங்கி வருகிறது. அந்த தங்கும் விடுதியைப் பராமரிப்பதில் பள்ளி மேலாளர் வாரியம் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு  வருடாந்திர மானியத்தோடு கூடுதலாக 50,000 வெள்ளியைச் சேர்த்து 100,000 வெள்ளியாக வழங்குகிறேன் என அவர் அறிவித்தார்.

மாநில அரசின் இவ்வாண்டுக்கான  மானியம் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதால்  இந்த கூடுதல் நிதி அடுத்தாண்டு மானியத்திலிருந்து வழங்கப்படும் என அவர் சொன்னார்.

மிட்லண்டஸ் தமிழ்பள்ளிக்கு இன்று அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்தினருடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்

பள்ளி வாரியத் தலைவர் க.உதயசூரியன், வாரிய உறுப்பினர்கள் சீரிய நாதன், குமரவேல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா துணை இயக்குநர் டாக்டர் ரஸிடா, மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஒரு நவீன தமிழ்ப் பள்ளியாக விளங்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்பள்ளி 90 லட்சம் வெள்ளியில் நிர்மாணிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில அரசு 30 லட்சம் வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தது. 18 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளி அரசாங்கத்தின் பகுதி உதவி பெறும் பள்ளியாகும்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மட்டுமே நாட்டில் மாணவர் தங்கும் விடுதியை கொண்ட பள்ளியாகும். தற்போது இப்பள்ளியில் 165 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

அதேசமயம்  இப்பள்ளியின் தங்கும்  விடுதியில் ஐந்தாம்  மற்றும் ஆறாம் ஆண்டு பயிலும்  11 மாணவர்கள் மட்டுமே தற்போது தங்கியுள்ளனர்.

முன்னதாக இந்நிகழ்வில் பேசிய பள்ளியின் வாரியத் தலைவர் உதயசூரியன், இந்த தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்த கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தங்கும் விடுதியை  நடத்துவதில் நிலவும் நிர்வாகச் சிக்கலை களையவும்  தங்கும் விடுதியை பராமரிக்கவும் சிலாங்கூர் மாநில அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.