ஷ ஆலம், ஜூன் 12- நுர் ஃபாரா கார்த்தினி என்ற பெண்ணை கடந்தாண்டு
படுகொலை செய்ததாக போலீஸ்காரர் ஒருவர் மீது இங்குள்ள உயர்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி ஜூலியா இப்ராஹிம் முன்னிலையில் தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இக்குற்றச்சாட்டை லான்ஸ் கார்ப்ரல் முகமது அலிஃப் மோன்ஜானி (வயது 27) என்ற அந்த போலீஸ்காரர் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்தாண்டு ஜூலை 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கும் ஜூலை 15ஆம்
தேதி மாலை 6.00 மணிக்கும் இடையே, உலு பெர்ணம், எஸ்கேசி
கிளேடாங் செம்பனைத் தோட்டத்தில் 25 வயதுடைய நுர் ஃபாரா
கார்த்தினியை படுகொலை செய்ததாக அவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனை அல்லது நாற்பது
ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12
பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது
பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மறு விசாரணையை நீதிபதி ஜூலியா எதிர்வரும் ஜூலை
மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, இன்று காலை போலீஸ் காவலுடன் நீதிமன்றம் கொண்டு
வரப்பட்டார். அவரின் வழக்கறிஞர்களான நுர் அய்டா முகமது ஜைனுடின்
மற்றும் அய்டா ஜாபர் ஆகியோரும் உடன் வந்தனர்.
சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் மாணவியான நுர் ஃபாரா
கார்த்தினியை படுகொலை செய்ததாக முகமது அலிஃப் மீது கடந்தாண்டு
ஜூன் மாதம் 26ஆம் தேதி கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மே மாதம்
28ஆம் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.


