ஷா ஆலம், ஜூன் 12: கடந்த மாதம் பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் பகுதியில் மத்திய சேமப்படை (எஃப்.ஆர்.யு.) டிரக் விபத்துக்குள்ளானதற்கு கற்களை ஏற்றிய டிப்பர் லோரி எதிர் தடத்தில் நுழைந்ததே முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த லோரி எஃப்.ஆர்.யு. வாகன அணி பயணித்த எதிர் தடத்தில் நுழைந்து சம்பந்தப்பட்ட எஃப்.ஆர்.யு. டிரக்குடன் மோதியதாக இவ்விபத்து குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் பூர்வாங்க அறிக்கை கூறியது.
இச்சம்பவம் நடந்த இடத்தில் சாலையின் மேற்பரப்பில் காணப்பட்ட பிரேக், டயர் மற்றும் உராய்வு அடையாளங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இருப்பினும், லோரி ஓட்டுநர் எதிர் தடத்தில் நுழைந்ததற்கான சரியான காரணத்தை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று போக்குவரத்து அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட விபத்து குறித்த பூர்வாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், விபத்துக்கு நேரடிக் காரணமாக அமையக்கூடிய இயந்திரக் கோளாறு சம்பந்தப்பட்ட எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக, தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில், லோரியின் முக்கிய இயந்திர அமைப்புகளான பிரேக், டயர்கள், ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் அனைத்தும் திருப்திகரமான நிலையில் காணப்பட்டதோடு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்பவும் இருந்தது கண்டறியப்பட்டது என்று அறிக்கை கூறியது.


