ரவாங், ஜூன் 12- இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட
அதிரடிச் சோதனையில் போலியானவை என சந்தேகிக்கப்படும் 2,120
போத்தல் திரவ சலவை சோப்பு பறிமுதல் செய்யப்பட்டது.
போலி பொருள்களில் சேமிப்பு கிடங்காகக் பயன்படுத்தப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் அந்த தொழிற்சாலை மீது கடந்த இரு வாரங்களாக
மேற்கொள்ளப்பட்ட உளவு நடவக்கையின் பலனாக நேற்று முன்தினம்
பிற்பகல் 2.00 மணியளவில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது என்று
அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு தலைவர் முகமது
ஹரிசாம் செச்சிக் கூறினார்.
அந்த சோதனையின் போது பிரசித்தி பெற்ற பிராண்டுகளின் பெயரைக்
கொண்ட போலி சலவை சோப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது மொத்தம் 29,680 வெள்ளி மதிப்புள்ள
பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்த சலவைப் பொருள்கள் கிள்ளான் பள்ளத்தாக்கை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்ட வேளையில் அசல் சோப்பை விட குறைந்த
விலையில் விற்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த எட்டு
மாதங்களாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
என்றார் அவர்.
இந்த சோதனை நடவடிக்கை தொடர்பில் 2019ஆம் ஆண்டு வர்த்தக
முத்திரை சட்டத்தின் 102(சி) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று அவர் சொன்னார்.
விசாரணைக்கு உதவ அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்
அழைக்கப்படுவார். அசல் வர்த்தக முத்திரை உரிமையாளரும் இந்த
விசாரணைக்கு உதவி வருகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.


