குவாந்தான், ஜூன் 12 - சாலை சந்திப்பு சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கார் மோதியதில் அதில் பயணம் செய்த இரு பதின்ம வயதுப் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்துயரச் சம்பவம் தெமர்லோ, ஜாலான் தெங்கு இஸ்மாயிலில்
நேற்றிரவு 11.00 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் யமஹா ஈகோ அவந்திஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நூர் இர்டினா ஷஃபியா முகமது நஸ்ரி மற்றும் அதில் பயணித்த 18 வயது அனீஸ் இர்டினா சோபியா கைருல் அஸ்மான் ஆகியோர் உயிரிழந்ததாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹசான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்து நிகழ்ந்த போது அவர்கள் இருவரும் மெந்தகாப்பிலிருந்து புக்கிட் ஆங்கின் சாலை சுற்றுவட்டம் நோக்கி பயணித்தது கண்டறியப்பட்டது. அவர்கள் சிவப்பு போக்குவரத்து விளக்கில் நின்றபோது பெரோடுவா பெஸ்ஸா கார் வேகத்தைக் குறைக்கத் தவறி பாதிக்கப்பட்டவரின் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது என்று அவர் சொன்னார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் இன்று காலை பிரேதப் பரிசோதனைக்காக இங்குள்ள சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மஸ்லான் கூறினார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காரை சோதனை செய்த போது ஷாபு மற்றும் ஹெரோயின் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் பொட்டலங்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு 6,000 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கோலாலம்பூர், கெப்போங்கைச் சேர்ந்த அந்த 38 வயது கார் ஓட்டுநர் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்.


