கோலாலம்பூர், ஜூன் 12 - தெலுக் இந்தான், ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் கடந்த மாதம் மத்திய சேமப்படை டிரக்குடன் மோதிய லோரி சரளைக் கற்களை ஏற்றுவதற்கான அனுமதியைக் கொண்டிருக்கவில்லை என்பது போக்குவரத்து அமைச்சின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த லோரி சரளைக் கற்களை ஏற்றிச் செல்ல சட்டப்பூர்வ அனுமதியைப் பெறவில்லை. மாறாக, அந்த லோரி நிலக்கரியை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது என்பதை பூர்வாங்க விசாரணை முடிவுகள் காட்டுகின்றன.
ஆயினும், சம்பவம் நடந்த நேரத்தில் அந்த லோரி 40,960 கிலோ சரளைக் கற்களை ஏற்றிச் சென்றதுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட சுமை வரம்பை விட 70 சதவீதம் அதிகமாகும்.
மேலும், தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்) கோரியுள்ளபடி வாகனத்தில் ஜி.பி.எஸ். சாதனம் பொருத்தப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
சம்பந்தபட்ட அந்த லோரி 2010ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் 57வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அங்கீகார உரிமத்தின் நிபந்தனைகளை மீறியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
மே 13 ஆம் தேதி காலை 8.54 மணிக்கு நடந்த விபத்தில் எஃப்.ஆர்.யு. உறுப்பினர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்கள் பயணித்த லாரி எதிர் தடத்தில் நுழைந்ததாக நம்பப்படும் கற்கள் ஏற்றிய லோரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விசாரணை ஆவணங்கள் விரைவில் அரசுத் தரப்புக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.
எஃப்.ஆர்.யு. டிரக்கில் பாதுகாப்பு வார்பட்டை இல்லாததும் அந்த டிரக்கின் பின்புறத்தில் உள்ள 'பெஞ்ச்' இருக்கைகளின் வடிவமைப்பும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தன என்று அறிக்கை கூறுகிறது.


