கோலாலம்பூர், ஜூன் 12 - கிரீக்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் உடனடியாக ரத்து செய்யப்படும்.
அப்பேருந்து நடத்துனர், அதன் அனுமதி பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியிருப்பதோடு பேருந்தின் GPS செயல்முறை இயக்கப்படாதது பெர்மிட்டுக்கான நிபந்தனைகளை மீறியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
மேல்முறையீடுகள் எதனையும் ஏற்றுக் கொள்ளாமல், அந்நிறுவனத்தின் பெர்மிட்டை உடனடியாக மீட்டுக் கொள்ளுமாறு தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம், APADக்கு லோக் உத்தரவிட்டுள்ளார்.
"இந்த உரிமையாளர் பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு, அதாவது கிளந்தானைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கு குத்தகைக்கு விட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது
இந்த பெர்மிட் உரிமையாளரின் முகவரி கெடாவில் உள்ளது. ஆனால், அவர் கிளந்தானில் உள்ள ஒரு நபருக்கு மாதத்திற்கு RM500-க்கு மட்டுமே குத்தகைக்கு விட்டுள்ளார். வாகனத்தின் GPS அறிக்கையைச் சமர்ப்பிக்கச் சொன்னபோது, GPS செயல்படுத்தப்படாததால் அவரால் அந்த அறிக்கையைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்," என்றார் அவர்.
கோலாலம்பூரில் நடைபெற்ற தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சிலின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சான்டர் நந்தா லிங்கியுடன் இணைந்து, லோக் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா


