புத்ராஜெயா, ஜூன் 12 - உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பழங்களுக்கு விற்பனை மற்றும் சேவை வரியை (SST) அமல்படுத்துவது தொடர்பான முரண்பாடுகள் குறித்த குழப்பத்தை நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
திங்கட்கிழமை அரசிதழில் வெளியான உத்தரவில், நாட்டில் விளையும் பெரும்பாலான பழ வகைகளுக்கு 5 விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் வரி விலக்குப் பெற்ற ஒரே பழ வகையாக தேங்காய் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் விளையும் பழங்களுக்கு SST வரி இல்லை என தற்போது அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும், பதப்படுத்தப்பட்ட அல்லது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் பொருட்களுக்கு மட்டுமே விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படும்.
நாட்டில் விளையும் விவசாயப் பொருட்கள் உற்பத்தி பொருட்களாகக் கருதப்படாது. எனவே, அவற்றுக்கு விற்பனை வரி கிடையாது என நிதியமைச்சு தெரிவித்தது.
இருப்பினும், அப்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அவை வரிக்கு உட்படும்.
உதாரணமாக வாழைப்பழங்கள், அன்னாசி, ரம்புத்தான் போன்ற வெப்பமண்டல பழ வகைகள் வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதியானால் வரி செலுத்த வேண்டும் என அது விளக்கியது.
பல்வேறு பொருட்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள SST வரி விதிப்பு, எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.


