ஜோர்ஜ் டவுன், ஜூன் 12 - நேரடித் தொடர்பு முதலீட்டு மோசடியில் சிக்கி இல்லத்தரசி ஒருவர் 521,450 வெள்ளி சேமிப்புத் தொகையை இழந்தார்.
செபராங் பிறை உத்தாராவைச் சேர்ந்த 57 வயதுடைய அந்தப் பெண்ணிடமிருந்து நேற்று இந்த மோசடி தொடர்பான புகாரை தமது துறை பெற்றதாகப் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டும் ஒரு முதலீட்டுத் திட்டத்தை தனது அண்டை வீட்டுக்காரர் கடந்த 2022ஆம் ஆண்டு தமக்கு அறிமுகப்படுத்தியதாக அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார் என அவர் கூறினார்.
பின்னர், முதலீட்டு சந்தை அதிகாரியாகச் செயல்பட்ட ஒரு பெண்மணி பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இந்த முதலீட்டின் வழி ஒரு மாத காலத்திற்குள் சேமிப்பு மற்றும் மூலதன முதலீட்டுத் தொகையிலிருந்து ஒரு மடங்கு அதிக இலாபத்தை ஈட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட மாதுவிடம் அந்தப் பெண் விளக்கியுள்ளார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2022 மார்ச் 4 முதல் 2024 ஜனவரி 22 வரை ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு 51 பரிவர்த்தனைகள் மூலம் 521,450 வெள்ளியை முதலீடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் இலாபத்தை எடுக்க முயன்ற போது சந்தேக நபர் அடிக்கடி பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி லாபத் தொகையை வழங்குவதை தட்டிக் கழித்துள்ளார். இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாது இது குறித்து போலீசில் புகார் செய்தார் என அவர் கூறினார்.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பது உட்பட, தண்டனைச் சட்டப் பிரிவு 420இன் கீழ் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

