கெய்ரோ, ஜூன் 12- இஸ்ரேலிய படைகள் காஸா மீது நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் நேற்று குறைந்தது 60 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவித் தளத்திற்கு அருகில் இருந்ததாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் யூதக் குடியேற்றமான நெட்சாரிமுக்கு அருகிலுள்ள உணவு விநியோக மையத்தை நேற்று விடியற்காலை பொதுமக்கள் நெருங்கியபோது நடத்தப்பட்டத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக ஷிஃபா மற்றும் அல்-குட்ஸ் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கடந்த 2023 அக்டோபர் முதல் ஹமாஸ் போராளிகளுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய இராணுவம், நெட்சாரிம் வழித்தடப் பகுதியில் தங்கள் துருப்புக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தேகத்தின் பேரில் சில நபர்கள் அடங்கிய குழுவை நோக்கி இரவு முழுவதும் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
நேற்று மாலை, ரூஃபாவில் உள்ள மற்றொரு ஜி.எச்.எஃப். தளத்தை பொதுமக்கள் நெருங்கும் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக தெற்கு காஸா கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் சுகாதார அதிகாரிகள் கூறினர்.
நேற்றிரவு, விநியோக தளங்களில் உதவி அமைப்போடு இணைந்து பணியாற்றும் இரண்டு டஜன் பாலஸ்தீனர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


