புத்ராஜெயா, ஜூன் 12 - கிரிக்கில் இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த 15 சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழக (உப்ஸி) மாணவர்களில் 13 பேர் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்திடம் (பி.டி.பி.டி.என்.) கடன் பெற்றவர்கள் என உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
அந்த 13 மாணவர்களும் தாங்கள் பெற்ற கல்விக் கடனை பி.டி.பி.டி.என். தக்காபுல் குழு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முழுமையாக செலுத்துவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றுள்ளதாக அவர் முகநூல் பதிவில் அறிவித்தார்.
கூடுதலாக, அந்த 13 மாணவர்களின் 13 வாரிசுகளும் தலா 1,500 வெள்ளியை மரண சகாய நிதியாகப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
கிரீக், கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் போது அந்த வாடகைப் பேருந்து திரங்கானுவின் ஜெர்த்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.


