ஷா ஆலம், ஜூன் 10 - நேற்று அதிகாலை நிகழ்ந்த சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழக (உப்ஸி) மாணவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்து விபத்தைக் கையாள்வதில கடுமையாக உழைத்த அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதார அமைச்சு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டது.
கிரிக் மாவட்ட மருத்துவமனை, உலு பேராக் மாவட்ட சுகாதார அலுவலகம் , தீயணைப்புப் படை, குடிமைத் தற்காப்புப் படை (ஏ.பி.எம்.), காவல்துறை மற்றும் சம்பவ இடத்தில் பணியில் இருந்த பிற நிறுவனங்களுக்கு இடையே காணப்பட்ட நெருக்கமான ஒத்துழைப்பை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது பெரிதும் பாராட்டினார்.
மாவட்ட சுகாதார அதிகாரிகளின் ஏற்பாட்டில் மொத்தம் 15 மருத்துவ அதிகாரிகள், 35 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஐந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டன. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதில் ஒரே குழுவாக செயல்படும் எங்கள் மன உறுதி அப்படியே உள்ளது என்பதற்கு இது சான்றாகும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
உயிர்களைக் காப்பாற்றுவதில் அதிகாரிகளின் அசாதாரண அர்ப்பணிப்பை விளக்கி டாக்டர் முகமது ஆடாம் பகிர்ந்து கொண்ட அனுபவம் தம்மை நெகிழ்ச்சியடையச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதுதான் நாட்டின் சுகாதார ஊழியர்களின் உண்மையான முகம். அவர்களுக்கு ஒருபோதும் சோர்வு என்பதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் ஒருபோதும் பாராட்டுக்களைக் எதிர்பார்த்ததில்லை என்று அவர் கூறினார்.
சுகாதார ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைக்காக தொடர்ந்து போராடுவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
கிரீக், கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் போது அந்த வாடகைப் பேருந்து திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.


